இக்கோயிலை 'லக்ஷ்மணன் கோயில்' என்று அழைக்கின்றனர். ஹரீத மகரிஷி உலக மக்களின் நன்மைக்காக திருமாலை நோக்கி தவமிருந்தார். பகவான் அவர்முன் பிரத்யக்ஷமாகி, அனுஷ்டான பிரகாரங்களையும், யோகத்தையும் - திருமொழியைக் கூறியதால் 'திருமொழிக்களம்' என்ற பெயர் ஏற்பட்டது என்று புராணம் கூறுகிறது. காலப்போக்கில் 'திருமூழிக்களம்' என்று மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ராமபிரான் தனது வனவாசத்தின்போது சித்திரக்கூடத்தில் தங்கியிருந்தபோது, அவரை மறுபடியும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல பரதன் அங்கு வந்தான். லக்ஷ்மணன் இதைத் தவறாக எண்ணி அவனுடன் போரிட்டு, பின்னர் தனது தவறை உணர்ந்தான். அப்போது பரதன் அன்புமொழிக் கூறி அவனை அணைத்துக் கொண்டான். இன்சொல் கூறியதால் 'திருமொழிக்களம்' என்று அழைக்கப்படுவதாகக் ஸ்தல வரலாறு கூறுகிறது. தற்காலத்தில் 'திருமூழிக்களம்' என்று மாறியது என்பர்.
மூலவர் திருமூழிக்களத்தான் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மதுரவேணி நாச்சியார் என்பது திருநாமம். ஹரீத மகரிஷிக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 14 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|